Wednesday, December 25, 2013

கீழ்வெண்மணி : செங்கொடி காத்து , ராமைய்யாவின் குடிசையில் எரிந்த விவசாயத் தொழிலாளர்கள்

எனது தந்தையின் சொந்த ஊர் திருவாரூரை அடுத்த கமலாபுரம் கருப்பூர் என்பதாலும், எனது ஒரு அண்ணியின் ஊர் கீழ்வெண்மணி என்பதாலும், சிறு வயதில் கீழ் வெண்மணிக்கு கோவில் திருவிழாவிற்காக சென்றிருக்கின்றேன். எங்கள் கிராமங்களில் இரண்டு வித சிகப்பு கொடி தவிர வேறு எந்தக் கொடிகம்பங்களும் காண முடியாது.நமக்கு சிறுவயதில் தெரிந்த தி மு க, அ தி மு க கொடி கூட காண முடியாது. இன்றும் அங்கு கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல்களில் வெற்றி பெற்று வருவது சான்று.(இப்பொழுது அனைத்து கட்சிக் கொடிகளும் காணப் படுகின்றது ) அங்குள்ள நினைவு மண்டபத்தை,நினைவு வளைவுகளை எந்த உணர்வும் இன்றி பார்த்திருக்கின்றேன். விவரம் தெரிந்த பிறகு பெருமையுடன் நினைத்து பார்க்கின்றேன், கீழத் தஞ்சை மக்கள் செங்கொடி ஏந்தி போராடி மடிந்திருக்கின்றார்கள் என்று. கொடி காத்த குமரன் குறித்து பாட புத்தகங்களில் படித்து இந்திய தேசிய உணர்வூட்டப்பட்டே வளர்ந்த நமக்கு தமிழ் தேசிய இன மக்கள் ஒடுக்கப் பட்ட வரலாறு தெரியாமல் போனதில் வியப்பில்லை.

இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு நடந்த, நெஞ்சை உலுக்கும் கொலை வெறியாட்டங்களில், தமிழ்நாட்டில் 1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் தேதி தேவேந்திரக் குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வரும் கீழ்வெண்மணியில் (தஞ்சை மாவட்டம்) நிகழ்ந்த படுகொலை குறிப்பிடத்தக்கதாகும். சாதிய மேலாதிக்கமும், நிலவுடைமையாளர்களின் ஆதிக்கமும் ஒன்றிணைந்து நடத்திய இந்தப் படுகொலையில் தேவேந்திரக் குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த 44 விவசாய கூலி விவசாயிகளின் குடும்பத்தினர் எரித்துக் கொல்லப்பட்டனர். அந்த நிகழ்வு இன்றைக்கு இங்கே நினைவு கூறப்பட்டுள்ளது.
. காலச்சக்கரத்தை திரும்பிப் பார்க்கிறேன் சரியாக 45 ஆண்டுகள். வரலாற்றின் நீண்ட நெடிய பக்கங்களில் 45 ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம். நேற்று நடந்தது போல இருக்கிறது. தஞ்சாவூர் அருகே அன்று நடந்த கொடுமையை இன்று நினைத்தாலும் நெஞ்சில் குருதி வடிகிறது. இந்தியாவில் நடைபெற்ற உக்கிரமான கொடுமைகளை பட்டியலிட்டால் கீழ வெண்மணி கொடுமையும் ஒன்று.

ஆம் . 1968-ம் ஆண்டு டிசம்பர் 25 அன்று நாகை மாவட்டம், கீழ்வேளூர் ஒன்றியம், கீழவெண்மணியின் தேவேந்திரக் குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள், அரைப்படி நெல் கூலியாக உயர்த்திக் கேட்டதாலும், தங்கள் குடிசைகளில் ஏற்றிய செங்கொடியை இறக்க மறுத்ததாலும், அதிகார வர்க்கத்தின் ஆணவம் பிடித்த நிலப்பிரபுத்துவக் கொடியவர்கள் கீழவெண்மணியை ரணகளமாக்கினார்கள். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 44 பேரை ஒரே குடிசையில் வைத்துக் கொளுத்திச் சாம்பலாக்கினார்கள்.

1968 டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை ஏசுநாதர் பிறந்த நாள் விழா
உலகெங்கும் கொண்டாப்படும் திருவிழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின் தேவேந்திர குல வேளாளர் (பள்ளர் ) சமூகத்தை விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடிய இரவாகவும், விடியாதஇரவாகவும் அமைந்தது

ஆம் . அன்றிரவு தஞ்சை மாவட்டம் கீழ வெண்மணியில் தேவேந்திரக் குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு தீ வைத்துக் கொளுத்தப்பட்டனர். கருகிச் சாம்பலாக்கப்பட்டனர். இவ்வாறு உயிரோடு தீக்கொழுத்தப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் வேறொன்றுமில்லை.

தேவேந்திரக் குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு தங்களுக்குக் கிடைக்கும் வழக்கமான கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கேட்டது தான் அவர்கள் உயிரோடு கொளுத்தப்பட காரணம்.

விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர். தங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக் கொள்ளப்பட்டது.

ஆனால் பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க மறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை அமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே முடக்கிவிட வேண்டுமென்று நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில் நெல் உற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். அந்த சங்கத்திலிருந்து திட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது , முக்கிய ஊழியர்களைக் கொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச் சதிகள் சம்பந்தமாக அவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்தியகம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் தான் அந்த உச்சக் கட்டக் கொடுமை நடந்தது.
25.12.68 மாலை 5 மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி , கணபதி என்ற இரண்டு தேவேந்திரக் குல வேளாளர் சமூகத்தை சார்ந்த விவசாயத் தொழிலாளர்களை மிராசுதாரர் சவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு வந்து கட்டை அவிழ்த்து விட்டு சென்றனர். அதன் பின்பு பெரு மிராசுதாரர் கோபால கிருஷ்ண நாயுடு போன்றோர் ஆள் திரட்டி வெண்மணி கிராமத்துக்கு அடியாட்களுடன் சென்றிருக்கிறார்கள்.

அவ்வாறு தாக்குவதற்கு சென்ற போது நடந்த கைகலப்பில் பக்கிரிசாமி என்பவர் இறந்து விட்டார். ஆனாலும் மிராசுதாரர்கள் துப்பாக்கிகள் சகிதம் அடியாட்களுடன் திரண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக தொழிலாளர்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது. துப்பாக்கித் தாக்குதலுக்குத் தாக்கு பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் ஓடி விட்டனர். தப்பித்து ஓட முடியாத தாழ்த்தப்பட்டவர்களின் தெருவில் தங்கியிருந்த பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உயிர் பிழைக்க கயவர்களிடம் மன்றாடியிருக்கிறார்கள்.

ஆனால் கொடுங்கோல் மிராசுதாரர்கள் மனம் இறங்கவில்லை. அனைவரையும் தெருக்கோடியிலுள்ள சிறு குடிசைக்குள் அடைத்திருக்கிறார்கள். தீ மூட்டி கதவை வெளியில் தாழ்பாளிட்ட அக்கிரமத்தைச் செய்தனர். தீயின் செந்நாக்குகள் அவர்களைப் பொசுக்க தொடங்கியது. அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல் வெளியில் கதறிக் கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் தூக்கி நெருப்பில் எறிந்த கொடுமையைச் செய்தனர். மேற்கண்ட கொடுமைகள் அனைத்தும் ஏக காலத்தில் நடந்துள்ளன.

இரவு எட்டு மணிக்கு சம்பவம் தொடர்பாக கீவளுர் காவல் நிலையத்திற்கு தெரிந்தும் காவல் துறையினர் இரவு 12 மணிக்கு வந்தனர். இரவு இரண்டு மணிக்கு தீயணைப்புப் படை வந்தது. அதிகார வர்க்கத்தின் கண்களில் பாமர மக்களின் உயிர் துச்சமானதே இந்த தாமதமாகும். மறுநாள் காலை 10 மணிக்கு குடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்துள்ளனர். மேற்கண்ட 44 பேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது அரை லிட்டர் நெல் கூலி உயர்வு கேட்ட காரணத்திற்காக மிராசுதாரர்கள் அளித்த பரிசாகும்.

இத்தனை கொடுமையையும் செய்த அக்கிரமக்காரர்கள் அதன் பின் இதனை விவசாயத் தொழிலாளர்கள் மீதே பழி போட சூழ்ச்சி செய்தனர். இதற்கு உதவிகரமாக சில பத்திரிகைகள் இட்டுக் கட்டி செய்திகள் வெளியிட்டன. “விவசாயத் தொழிலாளர்களேதங்கள் பெண்டு பிள்ளைகளை இச் சிறு அறையில் தள்ளி வெளியில் தாழ்ப்பாளிட்டுக்கொன்றனர் என்று கற்பனைக்கும் எட்டாத பொய்யைக் கூறினர். நிலபிரபுக்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட பொய்யைச் செய்தி ஆக்கினர்.

ஆனால் போலீஸ் ஐஜியோ கீவளுர் வட்டாரத்தில் லைசன்ஸ் பெற்ற துப்பாக்கிகள் 42 இருப்பதாகவும் 28 ஆம் தேதி முடிய 5 துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன என்ற கூறினார். இறந்தவர்களில் 19 பேர் பெண்கள், அதில் 12 பேர் திருமணமானவர்கள். 7 பேர் மணமாகாத இளம் பெண்கள் , ஆண்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள். 22 வயது முதிர்ந்த ஆண்கள் 3. துப்பாக்கிச் சூட்டில் காயமுற்றோர் 11 பேர்.

மிராசுதாரர்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி தான் சாகும் பொழுதும் தான் வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக் கூடாது என்று அவ்வாறு அணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி பார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.

வெண்மணியில் நடைபெற்ற கோரக் கொடுமையை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை. பண்பாடு நாகரீகம் மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் எட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெண்மணியில் வெந்து சாம்பலாக்கப்பட்ட நாற்பத்தி நான்கு தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் மீது இரக்கம் கூடக் காட்டவில்லையே ஏன் ? என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது.

அப்பொழுது கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும் வேலூர் பீடித் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தார்கள். கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல் எழுப்பினார்கள் ஜனநாயக உணர்வு கொண்ட பாட்ரியாட் நியுஏஜ் போன்ற டெல்லிப் பத்திரிகைகள் நாட்டுக்கே அவமானம் என்று கவலையோடு கண்டித்து எழுதின.

மக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் நீதி தேவனும் ஓரஞ் சாய்ந்து விட்டான். ஆம். வெண்மணிச் சம்பவத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்ட நிலப்பிரபு - கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றத் தீர்ப்பு :
“ Upon the consideration of the evidence on record the Judges felt constrained to hold that the prosecution had failed to bring home the guilt of any of them and consequently acquitted them. They said that the intrinsic infirmities in the prosecution evidence prevended them from convincting the persons who were probable innocene. -‘Hindu’

“பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை நிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக நீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப் பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு சாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள நபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம். - ‘இந்து பத்திரிக்கை

44 ஏழை உயிர்களின் மீது இதர மக்களுக்கு இரக்க குணம் ஏற்படாத நிலையில்- நீதிமன்றங்களிலும் - ஏழை மக்களுக்கு - தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காத போது - நிலப்பிரபுக்களும், பிற்போக்காளர்களும், சாதி வெறியர்களும் - சரடு போடப்படாத திமிர்க் காளைகளாக நாட்டில் இன்னமும் திரிந்து வருகிறார்கள்.
விடுதலை விடுதலை விடுதலை
பறையருக்கும் இங்கு தீயர்
புலையருக்கும் விடுதலை
பரவரோடு குறவருக்கும்
மறவருக்கும் விடுதலை.

என்ற பாரதி விடுதலைக் கனவு கண்டார். அக் கனவுகள் இன்னும் நனவாகவில்லை. பாரதியின் கனவை நனவாக்கக் கங்கணம் கட்டியாக வேண்டும்.
தாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் - இதரப் பகுதியினரை விட சாதி அமைப்பில் கொடிய ஓடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். அவர்களின் உரிமையை நிலை நாட்டுவது ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமாகும். கிராமங்களின் அடித்தட்டில் வாழும் விவசாயத் தொழிலாளர்களிடையே - சாதி வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். ஒன்றுபட்ட இயக்கமாக திரட்ட வேண்டும். வலியோர் இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து , எளியோர்களுக்குப் பாதுகாப்பாகவும் மக்களைத் திரட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
வெங்கொடுமைக்கு பலியான தேவேந்திரக் குல வேளாளர் சமூகத்தை சார்ந்த வெண்மணித் தியாகிகள்:

1. சுந்தரம் (45)
2. சரோஜா(12)
3. மாதாம்பாள்(25)
4. தங்கையன் (5)
5. பாப்பா (35)
6. சந்திரா (12)
7. ஆசைத் தம்பி (10)
8. வாசுகி (3)
9. சின்னப்பிள்ளை (28)
10. கருணாநிதி(12)
11. வாசுகி (5)
12. குஞ்சம்பாள் (35)
13. பூமயில் (16)
14. கருப்பாயி (35)
15. ராஞ்சியம்மாள் (16)
16. தாமோதரன் (1)
17. ஜெயம் (10)
18. கனகம்மாள் (25)
19. ராஜேந்திரன் (7)
20. சுப்பன் (70)
21. குப்பம்மாள் (35)
22. பாக்கியம் (35)
23. ஜோதி (10)
24. ரத்தினம் (35)
25. குருசாமி (15)
26. நடராசன் (5)
27. வீரம்மாள் (25)
28. பட்டு (46)
29. சண்முகம் (13)
30. முருகன் (40)
31. ஆச்சியம்மாள் (30)
32. நடராஜன் (10)
33. ஜெயம் (6)
34. செல்வி (3)
35. கருப்பாயி (50)
36. சேது (26)
37. நடராசன் (6)
38. அஞ்சலை (45)
39. ஆண்டாள் (20)
40. சீனிவாசன் (40)
41. காவிரி (50)
42. வேதவள்ளி (10)
43. குணசேகரன் (1)
44. ராணி (4)

தமிழ்நாட்டு நீதி மன்றம் கோபால கிருஷ்ண நாயுடுவை குற்றவாளி இல்லையென விடுதலை செய்தது. "காரில் " செல்லும் பண்ணையார் சகதி நிறைந்த வரப்புகளில் நடந்து வந்து குடிசையை கொளுத்தி இருக்க முடியாது என்று நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. GK மூப்பனார் உள்ளிட்ட நில முதலாளிகள், கோபால கிருஷ்ண நாயுடுவின் விடுதலையை திருவிழா போல் இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள் .

உழைக்கும் மக்களின் மா-லெ மக்கள் படை டிசம்பர் 14, 1980 அன்று மதியம் 3-20 மணிக்கு உழைக்கும் மக்கள் சுற்றி நின்று பார்க்க, கோபால கிருஷ்ண நாயுடு வெட்டிச் சாகடிக்கப்பட்டான். உழைக்கும் மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.




இத்தனை மோசமான நிகழ்ச்சி கதைகளிலும் இலக்கியத்திலும் பெரிய இடம் வகிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதை போன்ற ஒரு அநியாயம் இலக்கியவதிகளை எழுதத் தூண்டாதது ஆச்சரியம் என ஆர் வி குறிப்பிட்டுள்ளார்
அவர் தலைமுறையினர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப்புனல் மூலமாகவே கீழ் வெண்மணி குறித்து தெரிந்து கொண்டதாக கூறியுள்ளார்.
அவருக்கு தெரிந்த முக்கியமான புத்தகம் சோலை சுந்தரப் பெருமாள் எழுதிய செந்நெல் என்ற நாவல். இலக்கியத் தரம் என்று பார்த்தால் அவ்வளவு நல்ல நாவல் இல்லை என்றும், ஆனால் மிக முக்கியமான ஆவணம், சித்தரிப்பு மிகவும் உண்மையாக இருந்தது, ஒரு thinly disguised டாகுமெண்டரி போல இருந்தது என்றும் கூறி உள்ளார் .

பாட்டாளி என்பவர் எழுதிய கீழைத்தீ என்ற ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது. விடுதலை ஆன நாயுடுவை நக்சலைட்கள் கொன்றதை பின்புலமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வருவதை அப்பாவி விவசாய கூலித்தொழிலாளி கொண்டாடுவதும், வீட்டு விசேஷத்துக்கு மைக் செட்டை கூட சவுண்டாக வைக்கமுடியாத சாதி அவலமும், தச்சுத் தொழிலின் நுட்பமும், சன்னாசித் தாத்தாவின் கதைகளும், பார்ப்பனீய அசிங்கமும், போலிச்சாமியார்களின் பொய் வேஷமும், இடையே சாதிமறுப்பு காதலும், பண்ணையார்களின் அடாவடியும், பாட்டாளிகளின் போராட்டமும், நக்சல்பாரிகளின் எழுச்சியும், அழித்தொழிப்பும், கம்யூனிஸவாதிகளின் சுயவிமர்சனமும்.. அப்பப்பா.. எவ்வளவு விஷயங்களை அனாயசமாக தொட்டுச்செல்கிறார் தோழர். புதினத்தை வாசித்துமுடித்ததுமே அறுபதுகளில் கீழத்தஞ்சையில் பள்ளராகவோ, பறையராகவோ பிறந்து நக்சல்பாரி இயக்கத்தில் நாம் இயங்கியிருக்கக் கூடாதா என்ற ஏக்கம் வருவதாக யுவ கிருஷ்ணா குறிப்பிடுகின்றார் . அதே சமயம் , மார்கிஸ்ட் கட்சிக்கே உரிய , திராவிட எதிர்ப்பும் இந்நாவலில் பதிவு செய்யப் பட்டு உள்ளது அவரது விமர்சனம் இங்கே :

இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சி நம் பிரக்ஞையில் இன்னும் அழுத்தமாகப் பதியவில்லை என்பது ஆச்சரியம்தான். மூன்றே மூன்று புனைவுகள்தானா? வேறு யாரும் எதுவும் எழுதவே இல்லையா? சினிமா கினிமா வரவே இல்லையா? என்கிற கேள்வி எழாமல் இல்லை.

குருதிப்புனல் நாவல் பின்னாளில் " கண் சிவந்தால் மண் சிவக்கும்" என்ற முட்டாள்தனமான திரைப்படமாக வந்தது .

மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பா. கிருஷ்ணகுமார் ராமையாவின் குடிசை என்ற சிறந்த ஆவணப்படம் எடுத்திருக்கிறார்.

சமீபத்தில் தந்தி தொலைகாட்சியில் இச்சம்பவம் குறித்து ஒரு செய்திக்குறிப்பு ஒளிபரப்பப் பட்டது "

வலியோர் தம் ஆதிக்கமும் , வன்முறையும் எந்த வழியில் வந்தாலும் அதனை எதிர்த்து குரல் கொடுக்கவும், மக்களை திரட்டவும் வேண்டும். அது உலகை மேலாண்மை செய்யத் துடிக்கும் அமெரிக்காவை எதிர்த்து என்றாலும் சரி. ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பாப்பாபட்டி , கீரிப்பட்டி கொடுமையை எதிர்த்து என்றாலும் சரி. நாம் எதிர்க்க வேண்டும்.

டிசம்பர் - 25 எதிரிக்கு எதிரான நமது ஆத்திரத்தை சூடேற்றிக் கொள்ளவேண்டிய நாள் !
டிசம்பர் - 14 எதிரியைப் பழி தீர்த்து மக்கள் வெற்றியடைந்த நாள் ! வீர வரலாறும் நமக்குண்டு !
பழி தீர்த்த செங்கொடி இயக்க மாவீரர்கள் வாழ்க !

இந்த சமூகத்தில் கொடுஞ்செயல் புரிந்த அதிகார வர்க்கத்தை சேர்ந்தவர்கள் மீதான வழக்குகளில் , அரசுத் தரப்பு "சந்தேகத்திற்கு இடமின்றி " குற்றத்தை நிருபிக்க தவறுவதை கீழ் வெண்மணி வழக்கு முதல் சமீபத்திய "சங்கர் ராமன் கொலை வழக்கு" வரை பார்த்து வருகின்றோம். அதே நீதி மன்றத்தால் , பல சந்தேகங்கள் இருந்தாலும் "பேரறிவாளன்" போன்ற அப்பாவிகள் தூக்கு மேடைக்கு அனுப்பப் படும் அவலமும் அரங்கேறி வருவதை கவலையுடன் பதிவு செய்கின்றேன்.

குறிப்பு : காந்தி உருவாக்கிய சொல்லான "கடவுளின் குழந்தைகள் (தலித் )" என்று நான் பயன்படுத்த விரும்ப வில்லை / அதே போன்று தாழ்த்தப் பட்டவர்கள் என்றும் பயன் படுத்தாமல் , நேரடியாக தேவேந்திரக் குல வேளாளர் என்று பயன்படுத்தி உள்ளதற்கு காரணம் இந்த கட்டுரையை படிப்பவர்களின் கவனத்திற்கு இந்த ஒடுக்கப் பட்ட மக்கள் , நெடுங்காலமாக தங்கள் சாதிச் சான்றிதழில் "பள்ளன்", "மள்ளன்" "குடும்பன்" என்றும் (ஒரு மாவட்டத்தில் SC பட்டியலிலும் இன்னொரு மாவட்டத்தில் BC பட்டியலிலும் இருக்கும் வேறுபாட்டை களையவும்) இருப்பதை தேவேந்திரக் குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்று போராடி வருவதை தமிழக அரசு இன்று வரை கிடப்பில் போட்டுள்ளதை சுட்டி காட்டவே.

References :
1. விழிப்புணர்வு இதழ், நல்லக்கண்ணு கட்டுரை 2006
2. ராமைய்யாவின் குடிசை ஆவணப் படம்
3. நண்பர் அருந்தமிழன் முகநூல் நிலைப் பதிவு மற்றும் -மார்க்ஸ் பாண்டியன் கமெண்ட் .

Monday, December 23, 2013

எதிர் கட்சி இல்லாத சிக்கிம் முதல்வர் - சாதனை முதல்வர் பவன் குமார்

சாதனை முதல் அமைச்சர் " பவன் குமார் சம்ளிங் : -- ராஜ்மோகன் கே எஸ் தன்னைத்தானே சிறந்த முதல்வர் என்று சுய விளம்பரம் தேடும் முதல்வர்களுக்கு மத்தியில் எதிர்கட்சியே இல்லாமல் மக்களின் ஏகோபித்த தலைவனாக பணியாற்றிவரும் சிக்கிம் முதல் ஒரு முன்மாதிரி. தேர்தல்களில் தொடர்ந்து ஒரு கட்சியோ முதல்வரோ தேர்ந்து எடுக்கப்பப்படுவதை சாதனையாகக் கணக்கிட்டால் அதன் உச்சத்தை எட்டியவர் சிக்கிம் முதல்வர் P.K. சாம்லிங் அவர்கள் தான். இவருடைய கட்சியின் பெயர் " சிக்கிம் டெமோக்ரடிக் பார்ட்டி ( சிக்கிம் ஜனநாயகக் கட்சி ). இவர் கட்சி ஆரம்பித்து(1993) ஒரே வருடத்தில் ஆட்சியை பிடித்தார்(1994). 2004 சட்டமன்றத் தேர்தலில் இவரது தலைமையிலான SDF மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 ஐ வென்று எதிர்க்கட்சிக்கு ஒற்றை இடத்தை மட்டுமே விட்டு வைத்தது. 2009 சட்டமன்ற தேர்தல் மகுடம்.மொத்தமுள்ள 32 தொகுதிகளையும் P.K. Chamling அவர்கள் தலைமையிலான SDF வென்று ஆட்சி செய்து வருகிறது.அங்கு எதிர்கட்சியே இல்லை. இவர் 1982 இல் பஞ்சாயத்து தலைவராக ஜெயித்த இவர் , 1985 முதல் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றார். இவரன் சாதனைகள் : இவரது சமுக மற்றும் சீர்திருத்தவாதப் பணிகளில் பள்ளிகளுக்கு இலவச நிலம் வழங்கியது நிலமில்லா ஏழைகளுக்கு "விவசாயம் செய்ய இலவச நிலம் வழங்கியது . வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டமும் துவக்கப் பட்டு உள்ளது . தற்போதைய அரசாங்கத்தில் , தம்முடைய அரசின் திட்டங்களில் எழுபது சதவிகிதத்தை "கிராமப் புற வளர்ச்சி திட்டங்களுக்கும் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கும்" ஒதுக்கி வருகின்றார் . இவரின் அரசு தம்முடைய கடமையாக , ஏழை மற்றும் ஆதரவில்லாத தினக் கூலிகளின் சம்பளம் உயர்விற்காக போராடி, தற்பொழுது தினக் கூலிகளின் சம்பளம் இரு மடங்காக உயர வழிவகை செய்யப் பட்டுள்ளது
பெண்களுக்கு போதிய சமூக பாதுகாப்பு வழங்குவதற்கும் மற்றும் குடும்பக் கட்டுப் பாட்டை ஊக்கப் படுத்துவதற்கும் , " திட்டமிட்ட குடும்பம் " எனும் திட்டம் பெண்களுக்காகவே 2007 ஆண்டு முதல் செயல் படுத்த பட்டு வருகின்றது. சிக்கிம் அரசாங்க வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 50 % மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு வழங்கப் பட்டு வருகின்றது. பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் இலவசச் சீருடை வழங்கப் படுகின்றது. அனைத்து வகுப்புகளுக்கும் புத்தகங்களும் பயிற்சி ஏடுகளும் இலவசமாக வழங்கப் படுகின்றன. கல்லூரி படிப்பு வரை கல்வி இலவசம் ஆக்கப் பட்டு உள்ளது இவரின் அரசியல் குறிக்கோள் , "கூலித் தொழிலாளர்கள் அவர்களுக்குரிய வெகுமதியை பெற வேண்டும் என்பதே ஆகும். இவரது வரலாற்று சிறப்பு மிக்க பங்களிப்பு : "இந்திய தேசியத்தின் நீரோடையின் பக்கம் சிக்கிம் மக்களை " ஒன்றாக கலந்திடச் செய்ததில் , அவர்களை தேசபக்தி கொள்ள செய்ததில் இவரது பங்கு அனைவராலும் போற்றப் பட்டுள்ளது . அதற்காக அவர் பாரத் சிரோமணி எனும் உயரிய விருதை பெற்று உள்ளார் . மதச் சண்டை மற்றும் சாதிச் சண்டைகளை தடுக்கத்தவறி , மக்களை பிளவுப் படுத்தி, அரசியல் செய்பவர்களுக்கு மத்தியில் , கார்ப்பரேட் கம்பனிகளுக்கு மட்டும் சலுகைகளை வாரி வழங்கி அவர்கள் மூலமே போலி பிரச்சாரங்களை முன்னெடுத்து பிரதமர் கனவில் வாழும் முதல்வர்களுக்கு மத்தியில் சத்தம் இன்றி சாதனை படைத்து வரும் பவன் குமார் சாம்ளிங் அவர்களுக்கு ஒரு மனமார்ந்த வணக்கம் ! பச்சையை ஆடையில் மற்றும் சுற்றுச் சூழலை பேருந்திலும் மட்டுமே பயன்படுத்தும் முதல்வர்களுக்கு இடையே , " இந்தியாவின் படு பச்சையான முதல்வர் விருது (1998 )" அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தால் வழங்கி கௌரவிக்கப் பட்டார். இவர் ஒரு நேபாள மொழி எழுத்தாளர் மற்றும் இயல்பிலேயே கவிதை எழுதும் திறமை பெற்ற இவரது கவிதைகள் தொகுப்பாக வெளிவந்துள்ளன. சிறந்த நிர்வாகத் திறமை மற்றும் தலைமைப் பண்பிற்காக விருது (2009) உலக அமைதி- தமிழ் ஈழத்திற்கான மாணவர்கள கூட்டமைப்பு வழங்கி கௌரவித்தது. சிக்கிம் மணிபால் பல்கலைக் கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது. அமைதிக்கான தூதர் விருது பலவற்றை வாங்கி உள்ளார் . Dedicated to #NaMo fans.