Tuesday, January 28, 2014

மகிமை : சிறுகதை

அதிகாலை ஐந்து மணிக்கு அலாரம் அலறியதும் அமுதா தன்னுடைய மருமகள் ப்ரவீனாவை எழுப்பினாள். மார்கழி மாதப் பனியையும் பொருட்படுத்தாது, அவர்கள் இருவரும் பச்சைத் தண்ணீரில் குளித்து விட்டு அவசர அவசரமாக காலையுணவு சமைத்து பொட்டலம் போட்டு டப்பாவில் அடைக்கையில் மணி ஆறு ஆகியிருந்தது. பால்காரன் வாசலில் வந்து தன்னுடைய இரு சக்கர வாகன ஒலிஎழுப்பியில் (ஹாரன்) அழைப்பு விடுத்தான். பட்டுப் புடவையில் அமுதா பால்ப் பையை (பாக்கெட்டை) வாங்குகையில், "என்னம்மா! குடும்பத்தோட வெளில போற (வெளியூர் செல்வது)மாதிரி தெரியுது" என வினவினான். "ஆமாம் தம்பி! என் பேரப் புள்ளைக்கு ஒரு வாரமா சளி, தும்மிக்கிட்டே இருக்கான். எங்க குல தெய்வம் கோயிலுக்கு போயிட்டு வந்தா எவ்வளவு பெரிய நோயாயிருந்தாலும் ஒரே நாளில் சரியாயிடும். அதான் குடும்பத்தோட போறோம்" என்றாள். ப்ரவீனா காபி போட்டு எடுத்துக் கொண்டு , பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த கணவனையும் மாமனாரையும் எழுப்பினாள் . அவள் தன கைக் குழந்தையை எழுப்பி சுடுதண்ணீரில் குளிப்பாட்டி, உடையணிவித்து தாய்ப்பால் கொடுத்து தயார் படுத்தினாள். அனைவரும் கிளம்பி தயாராகுவதற்கும்,இரண்டாயிரம் ரூபாய்க்கு முன்பதிவு செய்திருந்த மகிழுந்து(கார்) ஓட்டுனர் வருவதற்கும் சரியாக இருந்தது. முந்தைய நாளே அலைபேசியில், கோயில் குருக்கள் கூறியிருந்தது போல் இராகு காலம் முடிந்து 9.00 மணிக்கு புறப்பட்ட அமுதாவின் குடும்பத்தினர், பொட்டலம் கட்டி எடுத்து வந்த காலை உணவை சாப்பிட்டு, செல்லும் வழியில் அறுநூறு ரூபாய்க்கு பூ , பழம் மற்றும் பூஜை சாமான்கள் வாங்கிக் கொண்டு ஒரு மணி நேரத்தில் குல தெய்வம் கோயிலைச் சென்றடைந்தனர். கோவிலைச் சுற்றியுள்ள வயல்களில் இயந்திரம் கொண்டு அறுவடை நடை பெற்றுக் கொண்டிருந்தது. கோவிலில் இவர்களுக்காக காத்திருந்த குருக்கள்,அமுதா குடும்பத்தினரை உபசரிப்புடன் வரவேற்று, அனைத்து பூசை சாமான்களையும் வாங்கிக் கொண்டு, ஒவ்வொருவரின் பெயர் மற்றும் நட்சத்திரத்தையும் கேட்டு மந்திரங்களை உச்சரித்தபடியே கருவறைக்குள் நுழைந்தார்.அவர் ஒரு மின்விசை மாற்றுக்குமிழ் (electric switch) இயங்கச்( on) செய்தவுடன், பக்தர் ஒருவர் கோவிலுக்கு அன்பளித்திருந்த "மின்சார இசை எழுப்பான்" பெரும் இரைச்சலுடன் மேள தாள இசையை எழுப்பியதும் அமுதாவின் பேரக்குழந்தை விழித்துக் கொண்டது. - குருக்கள் தேங்காயை உடைத்து, பூமாலைகளை சாமிக்கு அணிவித்து சூடம் ஏற்ற எத்தனிக்கையில், ஹச்ச்ச்ச்ச்ச் என்று தும்மினார். மேள தாள ஒலியில், அவர் தும்மியது கருவறைக்கு வெளியில் இருந்த அமுதா குடும்பத்தினருக்கு கேட்க வில்லை. அமுதா தட்சணையாய் கொடுத்துச் சென்ற முன்னூறு ரூபாயில் இருந்து முப்பது ரூபாய் எடுத்து ஒரு வாரமாய் இருந்த சளி மற்றும் இருமலுக்கு,மாத்திரை வாங்கினார் குருக்கள்.